நேற்றைய தினம் 20.08.2026 வியாழக்கிழமை பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட மின்னொளி காரணமாக சில பொது மக்களுக்கு பார்வை தொடர்பான அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 40 பேர் வைத்தியசாலையை நாடியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
விசேட கண் வைத்திய நிபுணர் திரு.மலரவன் அவர்களின் ஆலோசனைக்கமைய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக, நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய பொது மக்களும் தங்களது கண்களை அருகிலுள்ள வைத்தியசாலையிலோ அல்லது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் பொதுமக்களுக்கு உரிய அறிவித்தலை வழங்கி, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கண்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, ஏதேனும் பார்வை தொடர்பான அசௌகரியம் இருப்பின் தாமதிக்காமல் வைத்தியசாலை சென்று கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இவ்வறிவித்தலை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.

2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில், பத்தரமுல்லை, செத்சிறிபாய விளையாட்டு மைதான வளாகத்தில் “சுவாபிமானி திரிய தேசிய உற்பத்திகள் – 2026” தேசிய மட்ட விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் அடிப்படையில், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காக சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றது.
இதற்காக தேசிய மட்ட விருது, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மதிப்பீட்டுப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக, சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெ.சுசிலா மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.த.சுரேஷ்குமார் மற்றும் திருமதிஅ.குபின்ஸ்ரலா ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளின் திறமை, ஆற்றல் மற்றும் சுயநிறைவை ஊக்குவித்து, அவர்களை சமூகத்தின் சமமான பங்காளிகளாக முன்னேற்றுவதற்கான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

"கிளித்தட்டுப் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சாதனை படைத்தது"
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே ஆண்டு தோறும் நடத்தப்படும் அரச அதிபர் வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டியின் ஒரு அங்கமான ஆண்களுக்கான கிளித்தட்டுப் போட்டிகள் கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பதினாறு அணிகள் பங்கு கொண்ட இந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தை எதிர்த்து விளையாடிய சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 4 : 0 எனற அடிப்படையில் வெற்றி வாகை சூடியது.
மு.ப 9.00 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதம கணக்காளர் திரு கிருபாகரன் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத் தலைவர், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்திற்கான "Citizen Mirror: Divisional Productivity Index - 1.0" போட்டியில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 3 ஆம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றிய இந்த பிரம்மாண்டமான போட்டியில், எமது நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் சேவைக்கான அங்கீகாரமாக இவ்விருது கிடைத்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் வைபவம் நேற்றைய தினம் கொழும்பு Galle Face ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. எமது செயலகத்தின் சார்பாக கணக்காளர் மற்றும் உற்பத்திதிறன் அபிவிருத்தி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு இந்த உயரிய விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
எமது பிரதேச செயலகத்திற்கு பெருமை சேர்த்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! மக்களின் சேவையில் எமது பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடும்

"சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற கிளித்தட்டுப் போட்டிகள்"
"அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டித் தொடரில் கிளித்தட்டுப் போட்டிகள் இடம்பெற வேண்டுமென்ற யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தினரது கோரிக்கைக்கு அமைவாக இடம்பெறும் இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள செயலக ஊழியர்கள் அனைவரும் போட்டிக்குகந்த நுட்பங்களை உணர்ந்து, முயற்சி, பயிற்சி மற்றும் மதிநுட்பத்துடன் வியூகமமைத்து கிராமியப் பாரம்பரியங்களை சமகாலத்திலும் பாதுகாத்து வருகின்றமை மெச்சுதற்குரியது"என அரச அதிபர் புகழாரம்.
சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டுக்கழக கிளித்தட்டுத் திடலில் 13.06.2026 சனிக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ண கிளித்தட்டுப் போட்டிகளில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு மருதலிங்கம் பிரதீபன் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. சிவகரன், மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத் தலைவர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக வீராங்கனைகள் முதலாமிடத்தையும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக வீராங்கனைகள் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



















