2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில், பத்தரமுல்லை, செத்சிறிபாய விளையாட்டு மைதான வளாகத்தில் “சுவாபிமானி திரிய தேசிய உற்பத்திகள் – 2026” தேசிய மட்ட விருது வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் அடிப்படையில், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காக சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றது.
இதற்காக தேசிய மட்ட விருது, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மதிப்பீட்டுப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக, சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெ.சுசிலா மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.த.சுரேஷ்குமார் மற்றும் திருமதிஅ.குபின்ஸ்ரலா ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளின் திறமை, ஆற்றல் மற்றும் சுயநிறைவை ஊக்குவித்து, அவர்களை சமூகத்தின் சமமான பங்காளிகளாக முன்னேற்றுவதற்கான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.























