
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட J/150 மாதகல் கிழக்கு கடற்கரை பிரதேசத்தில் "கடலோர தூய்மைப்படுத்தல் தேசிய வேலைதிட்டம்" இன்று (23.05.2026) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய உதவிப்பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக கிராம அலுவலர், சமுர்த்தி முகாமையாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அலுவலர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்,பிரதேச சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புக்களது அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Butterfly & Biodiversity Park ஆரம்ப நிகழ்வு
உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதேச செயலகம் – சண்டிலிப்பாய் வளாகத்தில் “Biodiversity Corner” அமைக்கப்பட்டு, Butterfly & Biodiversity Park உருவாக்கும் செயற்பாடு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாகக் கிராம அலுவலர், உதவி மாவட்டப் பதிவாளர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களும், அலுவலக உத்தியோகத்தர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இயற்கைச் சூழல் உருவாக்கப்பட்டு, உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் உயர்ந்த மனப்பாங்கு ஊக்குவிக்கப்பட்டது.
பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் தங்களது கரங்களால் பட்டாம்பூச்சிகளுக்கு நட்பான மற்றும் தேன் வழங்கும் தாவரங்களை நாட்டி, உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதற்கான தங்களது பங்களிப்பை வழங்கினர்.


தேசிய உற்பத்தித்திறன் செயலகம், தேசிய புத்தாக்க முகவர் நிறுவனத்துடன் இணைந்து, 'உற்பத்தித்திறனுக்காக இளைஞர்களின் முன்யோசனைகள்' எனும் தொனிப்பொருளில் நடாத்தும் "Pro Youth" போட்டிக்காக, 16 -24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் எவரும் விண்ணப்பிக்க முடியும்.

'சுரகிமு லங்கா'(இலங்கையை காப்போம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம்!'
சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'சுரகிமு லங்கா' (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளதுடன் இத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
'செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் 'Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது.
இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே 'சுரகிமு லங்கா' திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.
எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு எமது பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்படுகின்ற வினாடி வினா போட்டி

கீழே தரப்பட்டுள்ள 20 வினாக்களுக்கும் விடைகளை எழுதி நாளை 06.03.2026 காலை 11.00 மணிக்கு முன்னராக எமது பிரதேச செயலக வரவேற்புக்கருமபீடத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
(வயது எல்லை இல்லை. விரும்பிய அனைவரும் பங்குபற்ற முடியும்)












